Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : முதல் டெஸ்ட் போட்டி…. 513 ரன்கள் இலக்கு…. வங்கதேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவை..!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறுவதற்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி  சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும்   ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணி சார்பில் மெஹதி ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசி குல்தீப் யாதவ் 5, முகமது ராஜ் 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் துவக்கவீரர் கேப்டன் கே.எல் ராகுல் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு துவக்க வீர சுப்மன் கில் மற்றும் புஜாரா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். சுப்மன் கில் 110 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அதன்பின் விராட் கோலி, புஜாராவுடன் கைகோர்த்து ஆடினார்.  புஜாரா சதமடித்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. புஜாரா 102 ரன்களுடனும் விராட் கோலி 19 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 61.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 258 ரன்கள் குவித்தது. இதையடுத்து முன்னிலை ரன்களுடன் வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸில் ஆடியது. 3ஆவது நாளான நேற்று ஆட்ட இறுதியில் களமிறங்கிய வங்கதேச அணி முடிவில் 12 ஓவர்களை சந்தித்து விக்கெட் இழக்காமல் 42 ரன்கள் சேர்த்தது. அதனை தொடர்ந்து இன்று 4ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேச அணியின் துவக்க வீரர்களான நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் ஜாகிர் ஹசன் இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தனர்.. முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை  47ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் பிரித்தார். சாண்டோ 67 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த யாசிர் அலி 5 மற்றும் லிட்டன் தாஸ் 19 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜாகிர் ஹசன் சிறப்பாக ஆடி சதம் (100) அடித்து பின் அஸ்வின் சுழலில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின் முஷ்பிகுர் ரஹீம் 23 ரன்களும், நூருல் ஹசன் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.. 4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர். வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு 241 ரன்கள் தேவை. தற்போது ஷகிப் அல் ஹசன் 40 ரன்களுடனும், மெஹிதி ஹசன் 9 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |