புத்தாண்டை முன்னிட்டு மது பிரியர்கள் அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது.மாணவ மாணவிகள் கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அம்மைதானத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மைதானத்தை நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மேலும் மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள், பிளாஸ்டிக் பைகள், பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் போன்றவை அப்பகுதியில் கிடந்தது. அங்கிருந்த பாடல்கள் அனைத்தும் உடைந்திருந்தது.
இதனால் நேற்று முன்தினம் மைதானத்திற்க்கு நடைபயிற்சி சென்ற ஒருவரின் காலில் உடைந்த பாட்டிலின் கண்ணாடி குத்தி காயம் அடைந்தது. அதனால் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் சமூக நலன் கருதி மைதானத்தில் இருந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். உடையாது இருந்த மதுபாட்டில்களை சிலர் மூட்டை கட்டி தூக்கி சென்றனர்.
மேலும் இதுபோன்று மைதானத்தை பார் போல பயன்படுத்தாமல் இருக்க பள்ளி விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் உயரமாக சுற்றுச் சுவர் அமைத்து, அதன்மீது கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.