காதல் விவகாரத்தில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு தெருவைச் சார்ந்தவர் ஜெயராம். இவரது மகன் ஹரிஹரன் மாரியம்மன் கோயில் தெருவில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கோவிலின் முன்பு அந்தப் பெண்ணுடன் பேச முயன்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஹரிஹரனை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ஹரிஹரனை கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை கத்தியால் குத்தி கொலை செய்த கொலையாளிகளானா சங்கர், கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகிய அந்தப் பெண்ணின் தந்தை வேலன் மற்றும் உறவினர் முத்து ஆகிய இரண்டு நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஹரிஹரனின் உறவினர்கள் காந்திகிராமத்தில் உள்ள கரூர் திருச்சி சாலையில் போராட்டம் நடத்தி இந்த வழக்கில் அந்த பெண் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறினார்கள். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.