திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் (58), அவரது மனைவி கண்ணகி(52) ஆகியோரின் இளைய மகள் சத்யா(22) திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, துரை ராஜுன் சொந்த ஊரில் நல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக துரைராஜ் தம்பதியினர், சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மதுரவாயல் சரக உதவி ஆணையாளர் விசாரித்து வந்த வழக்கு, பூவிருந்தவல்லி நீதிமன்றத்திற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அரசு வழக்கறிஞராக இருந்த தனலட்சுமி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரி மணிகண்டனுக்குத் தண்டனை பெற்றுத் தரப் பணம் கேட்டு, பலமுறை துரைராஜ் மற்றும் கண்ணகி தம்பதியினரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே தங்களிடம் வழக்கை நடத்த அடிக்கடி பணம் கேட்டு, சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அரசு வழக்கறிஞர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் துரைராஜ் தம்பதியினர் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இவ்வழக்கு குறித்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்கறிஞர்களும், மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி செயல்பாட்டைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்ததுடன், நீதிமன்றத்தையும் புறக்கணித்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இத்தருணத்தில் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளிகளிடம் பேரம், வழக்காடிகளிடம் பணம் வாங்கியதாக எழுந்த பல்வேறு புகாரின் பேரில் பணிநீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் புதிதாகத் திருவள்ளூர் மாவட்ட மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு, அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படும் வரை பணி காலியாக இருக்கும் என்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது