A1 திரைப்படத்தை தடை செய்ய கோரி அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிராமணர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக A1 திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தணர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி நிர்வாகி துர்கா பேசுகையில்,A1 படத்தில் குறிப்பிட்ட காட்சிகளில் பிராமண சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வார்த்தைகள் பிராமணப் பெண்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே அந்த காட்சிகளை நீக்கக் கோரியும்,படத்தை தடை செய்யக் கோரியும் இன்று கோவை மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் நாங்கள் புகார் அளிக்க வந்துள்ளோம்.இந்த கோரிக்கையை ஏற்று,குறிப்பிட்ட காட்சிகளை நீக்கும்படியும்,படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.