இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் வருகின்ற 18ஆம் தேதி தொடங்குகிறது. இதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியில் இடம்பெற்றுள்ள, சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ” இங்கிலாந்து அணி அவர்களுடைய, சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
அதுவும் அவர்களுடைய கண்டிஷனில் தாங்கள்தான் சிறந்தவர்கள் என்று காண்பிப்பார்கள். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் ,இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். இதனால் தற்போது இந்திய அணிக்கு கிடைத்த அனுபவத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணியின் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து மற்ற பேட்ஸ்மேன்களும் ரன்களை குவித்தால், தொடரை கைப்பற்றலாம். நான் இதுவரை 400 விக்கெட்டுகள் மேல் வீழ்த்தியுள்ளார். வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் பந்துவீசி, அவர்களுடைய விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறேன். சிறந்த வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது மகிழ்ச்சியான சவாலாக இருக்கும். போட்டியில் முதல் பேட்ஸ்மேன் முதல் இறுதி பேட்ஸ்மேன் வரை, பந்து வீசுவதற்கு தயாராகி வருகிறேன் ‘ என்று அவர் கூறினார்.