தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் படி, கரூர் மாவட்டம் காந்திபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், முதற்கட்டமாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் பேட்டரி பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் விதமாக சென்னையில் மட்டும் ஆயிரம் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.