கடந்த 3 ஆண்டுகளாக வாகனங்களிலிருந்து பேட்டரியை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார், ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் இருக்கும் பேட்டரிகள் தொடர்ச்சியாக திருடு போனது. இதனால் கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பேட்டரியை திருடி சென்ற நபரை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் கொடுங்கையூர் எம்.ஆர் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த நபர் காசிமேடு பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பதும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுங்கையூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களிலிருந்து பேட்டரியை திருடிய சென்றதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.