கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருக்கும் 17 பழங்குடியின கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழைய சர்க்கார்பதி என்ற பழங்குடி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் படிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரமுடைய சேத்துமடை பகுதிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் மேல்படிப்புக்கு செல்லும் மாணவர்களை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
அவ்வபோது வன விலங்குகளின் அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, கடந்த எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 34 மாணவர்கள் எழுதவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பேட்டரி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது, பேட்டரி வாகனம் கடந்த 3 மாதங்களாக இயக்குவதற்கு ஆளின்றி கிடப்பில் போடப்பட்டது. ஆனால் தற்போது வனத்துறையினர் ஒரு ஊழியரை நியமித்துள்ளனர். இதனால் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளனர்.