இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில நாள்களுக்கு முன்னதாக ஹர்திக், உடல்தகுதி சோதனையில் தன்னால் எளிதாக வெற்றிபெற முடியும் எனக் கூறியிருந்ததால், தற்போது இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசுகையில், ”தேசிய அணிக்காக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக பரோடா அணிக்காக ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடுமாறு ஹர்திக் பாண்டியாவுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர் உடல்தகுதி இருப்பவராக எண்ணுவது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.
உடல்தகுதி சோதனை என்றதும் யோ யோ டெஸ்ட் என்று எண்ணவேண்டாம். வேலை பளுவுக்கான உடல்தகுதி சோதனை என்று ஒரு டெஸ்ட் உள்ளது. அதில் ஹர்திக் தோல்வியடைந்துள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் முக்கிய வீரராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இதனால் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவை முழு உடல்தகுதியுடன் களமிறங்க அறிவுறுத்தியுள்ளது. எனவே நியூசிலாந்து தொடருக்குப் பின் இந்தியாவில் நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.