கொரானா வைரஸ் காரணமாக ஐ.பிஎல் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 3100க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் தற்போது பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மும்பை வான்கடே மைதானத்தில் வருகின்ற 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியை காண வெளிநாட்டில் இருந்தும் ரசிகர்கள் இந்தியாவுக்கு வருவார்கள்.
இந்த நிலையில், கொரோனா வைரஸால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஐ.பிஎல் போட்டி மற்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் இரண்டுக்கும், அதனால் (கொரோனா) எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெளிவாக பதிலளித்தார். இதேபோல் ஐ.பி.எல் நிர்வாக கவுன்சில் தலைவர் பிரிஜேஷ் படேலும், ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.