நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் எல்லா உணவுகளுக்கும் மிக முக்கியமானது உப்பு. உப்பு இல்லாமல் உணவை நம்மால் சாப்பிட முடியாது.
ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. உப்பை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பதாக டபிள் யூ எச்ஓ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சந்தைகளில் விற்பனைக்கு வரும் பிரட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வெண்ணை உள்ளிட்ட பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதை சுட்டிக் காட்டிய டபிள் யூ எச்ஓ, அரசு நிர்வாகங்கள் செய்ய வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை 194 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.