சென்னை அருகே திருட சென்ற இடத்திலையே போதையில் உறங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மதுரவாயல் பகுதியை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர் முத்துக்குமார். கடந்த வாரம் இவரது வீட்டின் கீழ் உள்ள இவருக்கு சொந்தமான மூன்று கடைகளில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து ரூபாய் 70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளிக்க அப்பகுதி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை அதிகாரிகள் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் அதே பகுதியில் உள்ள கடை முன்பு வாலிபர் ஒருவர் தலைக்கேறிய போதையுடன் கடை ஒன்றின் வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞனை எழுப்பி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த வாரம் மூன்று கடைகளில் ரூபாய் 70 ஆயிரத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.