பஞ்சாப் விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், விவசாயிகளை வஞ்சிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்த சட்டம் ஆதரவாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு தழுவிய போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தன.
இந்த நிலையில்தான் நேற்று நடைபெற்ற தசரா விழாவை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உருவ பொம்மையை அரக்கனாக சித்தரித்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பஞ்சாப் விவசாயிகள் பிரதமர் மோடியின் மீது கடும் கோபத்தில் உள்ளது எனக்கு வருத்தம் அளிக்கின்றது. விவசாயிகளின் கோபம் நாட்டுக்கு ஆபத்தான ஒன்று. எனவே பிரதமர் மோடி விரைவாக பஞ்சாப் விவசாயிகளின் குரலை கேட்க வேண்டும் என தெரிவித்தார்.