அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து மிகுந்த அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் வந்த கரடி கண்ணெரிமுக்கு கிராமத்தில் உள்ள பார்வதி என்பவரின் வீட்டு ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்து உள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தீப்பந்தங்களை காண்பித்து அந்த கரடிகளை விரட்டி அடித்தனர். மேலும் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் சுபாஷ் என்பவரின் பேக்கரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடிகள் அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்களை நாசம் செய்தன. இவ்வாறு கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் கூட வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.