குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்திற்குள் கரடி புகுந்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம், குப்பைகளை இயற்கை உரமாக மறுசுழற்சி செய்ய பயன்படும் இயந்திரங்கள், குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் போன்றவை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பூங்காவிற்குள் கரடி ஒன்று நுழைந்து குப்பைகளில் இருந்த வீணான உணவுப் பொருட்களை தின்றுவிட்டு செல்கிறது.
இந்நிலையில் வழக்கம்போல குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்குள் புகுந்த கரடியை பார்த்ததும் தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கரடியை வனப்பகுதிகள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.