வாலிபரை கொன்ற கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் எலக்ட்ரீசியனான மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது மனைவியை அழைத்து வருவதற்காக இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு மோகன்ராஜ் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற கரடி திடீரென மோகன்ராஜை தாக்கி இழுத்து சென்றதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு வனத்துறையினர் வாலிபரை கொன்ற கரடியை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.