மரத்தில் சிக்கி கொண்டு காயமடைந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் கிழக்குப் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் இருக்கும் ஒரு மரப்பொந்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த கரடி தேன் கூட்டை பார்த்ததும் வேகமாக மரத்தில் ஏறி உள்ளது. இதனை அடுத்து தேன் குடித்து கொண்டிருந்த போது கரடியின் கை அந்த மரத்தில் இருந்த பொந்திற்குள் வசமாக சிக்கி கொண்டது. இதனால் காயமடைந்த கரடியால் மரத்திலிருந்து கீழே இறங்க முடியவில்லை.
மேலும் அந்த மரத்திற்கு கீழே 2 கரடிகள் சுற்றி கொண்டிருந்தது. இதனையடுத்து தேயிலை பறிப்பதற்காக சென்ற தொழிலாளர்கள் கரடிகளை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மரத்திற்கு கீழே நின்று கொண்டிருந்த இரண்டு கரடிகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
அதன் பிறகு மரத்தில் சிக்கிய கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். இதனை அடுத்து மரத்தில் சிக்கிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கரடியின் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் கூண்டில் அடைத்து அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.