வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் கரடி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வந்த கரடி ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் நடமாடி உள்ளது. அப்போது இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
இதனையடுத்து உணவையோ, தண்ணீரையோ தேடி நகருக்குள் வந்த அந்த கரடி சாலை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் ஏற்கனவே அதிகமாக இருக்கும் சமயத்தில் தற்போது கரடி நுழைந்ததால் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இரவு நேரத்தில் கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.