கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் எபி பேபி. பொறியியல் பட்டதாரியான எபி, முதலில் பெங்களூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். தன்னுடைய எண்ணோட்டங்கள் பல உயரிய சிந்தனைகளை நோக்கி நகர்ந்ததால், வெகு காலம் அங்கு எபியால் பணியாற்ற முடியவில்லை. சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்ய வேண்டும், அந்த தொழில் புதுமையானதாக இருக்க வேண்டும் என எபி நினைத்தார்.
அதன் மூலம் அவருக்கு கிடைத்த ஞானம் தான் கழுதை. தமிழ் தாய், தந்தை, ஆசிரியர்கள் சரியாக படிக்காத பிள்ளைகளை ‘மாடு மேய்க்க தான் லாயக்கு, கழுதை மேய்க்க தான் லாயக்கு’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதையெல்லாம் தன் முயற்சியால் உடைத்தெறிந்திருக்கிறார் எபி. 21 கழுதைகளை வைத்து, ராமமங்கலத்தில் ‘டால்ஃபின் ஐபிஏ’ எனும் பண்ணையை மூன்று வருடங்களாக நடத்திவருகிறார்.
இவர் வைத்திருக்கும் கழுதைகளின் பாலினைக் கொண்டு ஃபேர்னெஸ் கிரீம், ஃபேஷியல் கிட், ஸ்கின் கிரீம், ஹேர் ஜெல் ஆகியன தயாரிக்கப்படுகிறது. உலகளவில் தங்கள் தயாரிப்புகளுக்கு நல்ல அங்கிகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் சாதனை பொறியாளர். பல லட்சம் ரூபாய்களில் வருவாயை ஈட்டும் எபியின் இந்த தொழில் திறமையை பாராட்டி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ‘புதுமையான விவசாயி’ விருதை அளித்து கவுரவித்துள்ளது.