கொரோனா தடுப்பிற்காக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது
மும்பையின் சிவப்பு விளக்கு, கொல்கத்தாவின் சோனாகாச்சி போல வணிக முத்திரை இல்லையென்றாலும், அசாம் மாநிலத்தில் இருக்கும் சில்சார் ராதாமாதா பகுதியில் , பாலியல் தொழில் செய்பவர்களின் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வாட்டியெடுக்கும் வறுமை, வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலே இவர்களின் துயர் வாழ்வுக்கான காரணம். இவர்களின் இருட்டு நிறைந்த வாழ்க்கை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களும், துயரங்களும் நிறைந்த ஒன்று. அந்த துன்பத்தில் கிடைக்கும் பணத்தால், இவர்களது வீடுகளில் உலை கொதிக்கிறது.
உணவுக்கு உலை கொதிக்க வேண்டுமா இல்லை, இவர்களின் வயிறுப் உணவின்றி வாட வேண்டுமா என்பதை முடிவு செய்வது, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம் மட்டுமே. இவ்வாறு அன்றாட வாழ்க்கை வாழவே போராட்டமாக இருக்க இதனிடையே கரோனா வைரஸ் அச்சத்தால் நாடு 21 நாள்கள் பூட்டப்பட்டது.
ஆனால், இந்த ஏழைகளின் வயிறோ உணவின்றி பசியால் திறந்து கிடக்கிறது. ஆம், மார்ச் மாதம் 24ஆம் தேதியிலிருந்து உண்ண உணவு இல்லாமலும் தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும், இவர்கள் உயிர்வாழவே போராடி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு சிறிதளவேனும் ஆதரவு கிடைக்குமா? என்பதே இவர்களது ஏக்கம்.
இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த ரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசிய பொழுது , “நாங்கள் வசிக்கும் இடத்தை , நிதிஷா பல்லி என்பார்கள். அதன் பொருள் தடை செய்யப்பட்ட பகுதி ஆனால், இங்கு வர யாருக்கும் தடை கிடையாது . நாங்கள் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்துகொள்ள போராடும் ஒரு சமூகம்.
21 நாட்கள் ஊரடங்கு காரணமாக, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரிசி போன்ற அடிப்படை உதவிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவலர்கள் வாயிலாக கிடைத்தது. ஆனால், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை. இதனிடையில் எங்களை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
நாங்கள் நன்றாகவே இருக்கிறோம். நாங்கள் இந்த சூழலை சமாளித்து விடுவோம். ஆனாலும், அரிசி மற்றும் சில பருப்பு வகைகளை வழங்கியிருந்தால் பெரிய உதவியாக இருக்கும்” என கூறியுள்ளார்.