கோடை காலத்திலும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பொழிந்து மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூரில் கடந்த 5 ஆம் தேதி காலை ஒரு மணி நேரம் வரை நல்ல மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று பரவலாக மழை பெய்துள்ளது.
கடலோர பகுதிகளான கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்துள்ளது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்திலும் அருப்புக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் ஆகிய காரணத்தால் திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இதேபோன்று உள் மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தது. அவர்கள் கூற்றின்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்த வண்ணம் உள்ளது. சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், பெரியமேடு, வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் பட்டாபிராம், ஆவடி, திருநின்றவூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
இதனால் கோடை வெப்பம் தணிந்து தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகி சென்னை பகுதியில் வசிக்கும் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.