அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வயதான ஆண் புள்ளிமான் ஒன்று கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் புள்ளி மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று உள்ளது. இதனால் படுகாயமடைந்த அந்த புள்ளி மான் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை அடுத்து அவ்வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய புள்ளி மானுக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனாலும் அந்த புள்ளிமான் துடிதுடித்து சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் வனப்பகுதியில் அந்த மானின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மானின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.