Categories
அரசியல் மாநில செய்திகள்

’ரஜினிக்கு முன்பு நாங்கள்தான்’ – அமைச்சர் ஜெயக்குமார் பிடிவாதம்!

நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த இயக்கம் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ராயபுரம் பகுதியில் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடத்தையும் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ குடியுரிமைச் சட்டத்திற்கு ரஜினிக்கு முன்பே எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போதுதான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசிவிட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதும் அதிமுகவின் நிலைப்பாடுதான்.

திமுக கார்ப்பரேட் கட்சியாகிவிட்டது. எவ்வளவு செலவு செய்தாலும் திமுக நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக, என் மீது அவதூறு பரப்பும் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விரைவில் நீதிமன்றத்தில் பதில் கூற வேண்டியிருக்கும் “ எனக் கூறினார்.

மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர்கள் அனைவரும் கண்டித்ததாக வரும் தகவல் குறித்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்ததையெல்லாம் வெளியில் கூற முடியாது என்றார்.

Categories

Tech |