தரங்கம்பாடி அருகே மகாத்மா காந்திக்கு முதன்முதலில் விடுதலை வேட்கையை உண்டாக்கிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாளான இன்று அவரை பற்றிய ஒரு தொகுப்பு.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோர்களுக்கு மகளாக தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த, இந்தியா எப்படி இருக்கும் என்று கூட அறிந்திராத 16 வயதேயான இளம்பெண் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடி, அந்த போராட்டத்தில் வெற்றிபெற்று உயிர்நீத்தார் என்றால் அவரது தியாகம் தான் எவ்வளவு மகத்துவமானது? அவர்தான் தில்லையாடி வள்ளியம்மை.
இந்திய சுதந்திரப் போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்த காலகட்டம். பிரிட்டிஷ் ஆதிக்கத்தை இந்தியா வலுவாக எதிர்த்துக் கொண்டிருந்த சமயம் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கான உரிமைகளை பெறுவதற்காக போராடிக் கொண்டிருந்தார். அங்கும் பிரிட்டீஷாரின் ஆதிக்கமே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது காந்தி தென் ஆப்பிரிக்காவிற்கு வந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியிருந்தத போது 1898ல் ‘ஜோகனஸ்பர்க்’ நகரில் முனுசாமி-மங்களம் தம்பதியினருக்கு பிப்ரவரி 22ம் தேதி மகளாகப் பிறந்தார் தில்லையாடி வள்ளியம்மை. வள்ளியம்மையின் தந்தை முனுசாமி புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரது தாய் மங்களம் தில்லையாடியைச் சேர்ந்தவர். இவர்கள் பிழைப்புக்காக இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு ஒரு சிறிய மளிகைக் கடை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்கு அங்கு குடியுரிமை கிடையாது. வரி அதிகம். மேலும் அவர்களது திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது. தேவாலயங்களில் நடைபெறும் திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அன்றைய காலத்தில் அங்கு நிறவெறி செயல்கள் அதிகம். அதன் வெளிப்பாடாகவே இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. 1913ம் ஆண்டு காந்தி தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கான உரிமையை பெறுவதற்காக ஜோகனஸ்பர்கில் இருந்து ‘நியூகேசில்’ நோக்கி சத்தியாகிரகப் போராட்டப் பேரணி நடத்தினார் காந்தி.
1913ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பேரணி தொடங்கியது. டிசம்பர் 22ல் டிரான்ஸ்வாலிலிருந்து நடால் நகர் நோக்கி அணிவகுப்பைத் தொடங்கினர். அந்தப் பேரணியில் மொத்தம் பதினாறு பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் தமிழ்ப் பெண்கள். கர்ப்பிணிப் பெண் ஒருவர் அதுமட்டுமின்றி கைக்குழந்தையுடன் ஒரு பெண் உட்பட அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் பேரணியிலிருந்த அனைவருக்கும் உதவி செய்தவாறே தனது 15வது வயதில் இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் வள்ளியம்மையும் கலந்து கொண்டார். அப்போது வள்ளியம்மையின் தந்தை முனுசாமி படுக்கையில் வீழ்ந்திருந்தார். இருப்பினும் இந்தியர்களின் உரிமைகளுக்காக அவரது தாயார் மங்களத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டார் வள்ளியம்மை.
அப்போது குறிப்பிட்ட நகரத்திற்குள் நுழைந்த போராளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். வள்ளியம்மையும் கைது செய்யப்பட்டு 3 மாதக் கடுங்காவல் தண்டனையில் மரீட்ஸ்பர்க் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அபராதம் செலுத்தினால் விடுதலை என்ற நிலையில் அது சத்தியாகிரகத்துக்கு அவமானம் என்று கூறினார். சிறையில் ஒரு ஆங்கிலேய அதிகாரி, சொந்தக் கொடி கூட இல்லாத இந்த மக்களுக்கு இவ்வளவு திமிரா என்று கேட்டுள்ளார். அப்போது தனது புடவையில் ஒரு பகுதியை கிழித்து அவரது முகத்தில் வீசியெறிந்து, இதுதான் எங்கள் தேசியக் கொடி என்று கூறியுள்ளார் வள்ளியம்மை.
இதையடுத்து சிறையில் கடுமையாக வேலை வாங்கியதன் காரணமாக வள்ளியம்மையின் உடல்நலம் குன்றியது. நாளடைவில் படுத்த படுக்கையானார் வள்ளியம்மை. சிறையிலேயே அவர் இறந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அரசு அவரை விடுவிக்க முடிவெடுத்தது.
கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த வள்ளியம்மை, கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்பே சிறையிலிருந்து வெளிவந்தார். படுத்த படுக்கையான வள்ளியம்மையை தனது நண்பருடன் இணைந்து தூளியில் தூக்கி வந்தார் மகாத்மா காந்தி. அந்த சமயத்தில் மனமுடைந்து போன காந்தி, “என்னால் தானே, என் அழைப்பை ஏற்று வந்ததால் தானே உனக்கு இந்த கஷ்டமெல்லாம்” என்று கதறியுள்ளார். அந்த சமயத்திலும் “நம் நாட்டுப் பெண்களை இழிவாக நடத்தும் சட்டத்திற்கு எதிரான இந்தப் பேரணியில் எனக்கு என்ன ஆனாலும் கவலை கிடையாது” என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார் வள்ளியம்மை.
வீட்டிற்கு வந்த பின்பு அவரது உடல்நலம் குன்றத் துவங்கியது. இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் வெற்றி பெற்ற வள்ளியம்மையால் நோயுடன் போராடி வெற்றிபெற முடியவில்லை. விடுதலையான 10 நாட்களில் அவர் பிறந்த பிப்ரவரி 22ம் தேதி அன்றே 1914ம் ஆண்டில் அவரது 16வது வயதில் உயிர் நீத்தார் வள்ளியம்மை.
பின்னாளில் தமிழகத்திற்கு வந்த பொழுது தில்லையாடி சென்று வள்ளியம்மையின் தியாகத்தை நினைத்து அங்கிருந்த மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார் மாகாத்மா காந்தி. அதுமட்டுமின்றி எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் இந்தியர்களுக்காக உயிர் தியாகம் செய்த வள்ளியம்மை தான் எனது விடுதலை வேட்கையின் ஆதி மூலம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை மகாத்மா காந்தியை நோக்கி ஆங்கிலேய அதிகாரி ஒருவர் துப்பாக்கியை நீட்டிய போது இடைமறித்து துணிச்சலுடன் முதலில் என்னை சுடு என்று கூறியவர் வள்ளியம்மை.
வள்ளியம்மை குறித்து இன்னும் விரிவாக மகாத்மா காந்தி அவருடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் புனித மகள் என்றும் அவரை போற்றியுள்ளார். தனது 16வது வயதில் இந்தியர்களுக்காக போராடி அனைவரது மனதிலும் விடுதலை தீயை எரியவைத்து உயிர்நீத்த வள்ளியம்மையின் தியாகத்தினை போற்றும் வகையில் தில்லையாடியில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது நினைவாக கட்டப்பட்ட பொதுநூலகம் இன்று வரை செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.