குற்றவாளி ஒருவர் காவல்நிலையத்தில் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் வசிப்பவர் பைரோஸ். இவர் மீது சேலம் மாநகர காவல் நிலையத்தில் பல்வேறு பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 2008ஆம் வருடம் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பைரோஸ் தற்போது வெளியே வந்துள்ளார். இதையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர் மீண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் குற்றம் செய்யாத தன்னை காவல்துறையினர் குற்றவாளி போல அடிக்கடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி காவல் நிலையம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், திருந்தி வாழ நினைக்கும்போது என் மீது பொய் வழக்குப் பதிவு செய்வது மனவேதனையாக இருக்கிறது. எனவே என்னை விடுவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். குற்றவாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.