மதுரை அருகே பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்த படத்தில் ரூபாய் ஒரு லட்சம் கொரோனாவுக்கான நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
மதுரை பகுதிகளில் யாசகம் பெற்று வரும் பூல்பாண்டியன் என்ற முதியவர் தனக்கு பிச்சையாக மக்கள் அளிக்கும் பணத்தை தன் உணவு தேவைக்கு போக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் பணம் உணவு தேவை போக, அதிகமாக வரும் பட்சத்தில், கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை அவர் பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
கொரோனாவுக்கு பின் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால், தனக்கு பிச்சையாக பணம் கொடுத்து தான் உயிர் வாழ உதவி செய்த மக்கள் நலன் கருதி பிச்சை எடுக்கும் பணத்தில், உணவுக்கு போக மீதி பணத்தை சேமித்து ரூபாய் பத்தாயிரம் என்ற வீதத்தில் 10 முறையாக ரூபாய் ஒரு லட்சம் நிவாரண நிதியை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவர் கொடுத்துள்ளார். இவரது இந்த சேவையை பாராட்டி சுதந்திர தின விழாவில் அவருக்கு விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.