தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், குமுளி, மார்த்தாண்டம், பாபநாசம், உடன்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோன்று மைசூரில் உள்ள சாட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து பண்ருட்டி, கடலூர், விருத்தாச்சலம், செங்கல்பட்டு, சேலம், தாம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். ஆனால் அரசு பேருந்துகளில் போதிய அளவுக்கு வசதி இல்லை என்பது பயணிகளின் நீண்ட நாள் குற்றச்சாட்டாகவே இருக்கிறது. இது குறித்து சில பயணிகளிடம் கேட்டபோது அரசு பேருந்துகளில் ஜன்னல்கள் சரி வர மூடுவதில்லை என்றும், ஒரு இடத்திற்கு செல்லும் போது தாமதமாக கொண்டு விடுகின்றனர் என்றும் கூறுகின்றனர். அதோடு சில சமயங்களில் பெரிய ஹோட்டல்களில் நிறுத்துவதால் சாப்பாடு அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் ஒரு பயணி கூறியுள்ளார்.
பெங்களூருவில் இருக்கும் கூட்ட நெரிசலில் பேருந்துகள் செல்ல தாமதமாக தான் செய்யும் என்பது சில பயணிகளின் கருத்தாக இருக்கிறது. அதன் பிறகு பயணம் செய்யும்போது இருக்கைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி இல்லை என்றும், சில சமயங்களில் ஏசி சரிவர வேலை செய்வதில்லை எனவும், ஜன்னல்களில் துணி இல்லை என்பதும் சில பயணிகளின் குற்ற சாட்டாக இருக்கிறது. மேலும் பேருந்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கூறும் போது அரசு போக்குவரத்து கழகத்தில் திறமையானவர்கள் மட்டும்தான் வேலை பார்க்கின்றனர் என்றும் நாங்கள் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போதும் இவர்கள் அதை சற்று கூட யோசிக்காமல் தாமதமாக செல்கிறார்கள் என்று குறை சொல்வது தான் வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.