கொரோனாவின் அடுத்த அலையை சமாளிக்க பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரையில் கொரோனாவின் பாதிப்பு முன்பை காட்டிலும்,
ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம். குறிப்பாக சென்னையில் நாளொன்றுக்கு 3000 என்ற அளவில் பாதிப்புகள் அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்போது சிறிதளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்,
கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி தற்போது குறைந்து வரும் நிலையில், அதிக கவனத்தோடு இருக்க வேண்டும் என்றார். மக்களே அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இல்லை என்றால், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.