சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை இழந்து உள்ளார். தமிழ்நாடு அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி விதிக்காமல், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் வஞ்சகம் செய்துள்ளது.
ராணுவ தலைமை பொறுப்பில் உள்ள பிபின் ராவத், இதுவரை எந்த ராணுவ தளபதியும் சொல்லாத அரசியல் கருத்தை சொல்வது ஆபத்தானது. ராணுவ தளபதி பேசியதை திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து மதிமுகவும் வழக்கு தொடர்ந்து உள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் முலமாகக் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகச் சீர்கேடு இங்கு இருக்கும்போது, இந்த அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்” என்றார்.