பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது லாபகரமானதுதான். வருமானத்தை பெருக்க முடியும். இதில் ரிஸ்க் அதிகம்.
உங்கள் வயது, உங்கள் முதலீடு, நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க், எதிர்பார்க்கிற லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கண கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வசதிகள் உள்ள ஒரே துறை மியூச்சுவல் ஃபண்ட்தான். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையுடன் தொடர்பு கொண்டு செயல்படுபவை. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் வருவாயும் ஏறி இறங்கும். எனினும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய சந்தேகம் இருக்கும்.
பங்குச்சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பங்குகளை கூட, மியூச்சுவல் ஃபண்ட் முலம் சிறிய யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட்-களில் ரிஸ்க் குறைவு. நாம் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிபுணர்களை கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றுகூறுகின்றனர்.
எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொறுத்தவரை ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட்களில் புதிதாக முதலீடு செய்ய திட்டமிட்டிருப்போருக்கு இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் சிறந்த சாய்ஸ். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும்போது, இண்டெக்ஸ் வளர்ச்சிக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும்.
இண்டெக்ஸ் ஃபண்ட் என்றால் என்ன? பங்குச் சந்தையில் ஒரே இண்டெக்ஸை சேர்ந்த பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதுதான் இண்டெக்ஸ் ஃபண்ட் எனப்படுகிறது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வாகிக்க மேலாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். ஆனால், இண்ட்க்ஸ் ஃபண்ட்களுக்கு மேலாளர் தேவையில்லை.
பங்குச் சந்தையில் இண்டெக்ஸ் வளர்ச்சிக்கு ஏற்ப நேரடியாகவே முதலீடும் வருமானம் கொடுக்கும். சில சமயங்களில், இண்டெக்ஸ் போதிய வேகத்தில் வளர்ச்சியடையாமல் இருக்கலாம். அதே சமயம் சில பங்குகள் மட்டும் நல்ல வேகத்தில் முன்னேறும். அதுபோன்ற சூழலில் மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் காட்டிலும் இண்டெக்ஸ் ஃபண்ட் குறைவான வருமானம் கொடுக்கும்.
இருப்பினும், ஏராளமான முதலீட்டாளர்கள் இண்டெக்ஸ் ஃபண்ட்களை அதிகம் விரும்புகின்றனர். மேலாளர்களால் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்கள் அதிக வருமானம் தராத காலங்களில் கூட இண்டெக்ஸ் ஃபண்ட்களில் நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. ஏனவே, தொடக்க நிலை முதலீட்டாளர்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்ட் சிறந்த சாய்ஸ்.