மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தை அரசு அதிகாரிகள் ஒழுங்காக அமுல்படுத்தவில்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் தொழுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தின் ஊரீசு கல்லூரியில் நேற்றைய தினம் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.பின் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நமது முன்னோர்கள் ஆற்றங்கரையோரம் தங்கியிருந்து நாகரீகத்தை வளர்த்த சமயத்தில் வீட்டு கழிவுகள் ஆற்றில் கலக்காமல் பார்த்துக் கொண்டனர். இப்போது நாகரிகம் தோன்றிய ஆறுகள் அருகில் யாரும் தங்குவது கிடையாது. ஏனெனில் அங்கு கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி தொற்றுநோய் ஏற்படுவதுதான் காரணம்.
இதனால் குடிநீரை கூட விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு நாமெல்லாம் தள்ளப்பட்டு விட்டோம் என்று கூறிய அவர் வருங்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய துரோகத்தை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் தொழுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனால் மனித உடல் நலத்திற்கும், உயிருக்கும் ஆபத்து தான். இதனை தடுப்பதற்காக மத்திய அரசு வீட்டிற்கு ஒரு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான உதவித்தொகை வழங்கி அதற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனால் நம் மாநிலத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளோ அதில் மிகப்பெரிய தவறு இழைத்து வருகின்றனர். பலர் பாதி கட்டி விட்டு மீதி கட்டாமல் ஊழல் செய்தும், மக்களுக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கமாலும், சிலர் காட்டாத கழிப்பறையை கட்டியதாகவும் தவறு செய்து வருவதாக சுட்டிக்காட்டினர். வேலூரில் இதுவரை 121 தொழு நோயாளிகள் உள்ளனர். திறந்தவெளி மலக்கழிப்பினால் உருவாகும் தொழு நோய்களுக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகளே காரணமாக இருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.