விடுதலை போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் கட்டப்பட்ட பாரத மாதா நினைவாலயத்தை மந்திரி மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தமிழக அரசு செய்தித் துறை சார்பில் சுப்பிரமணிய சிவா நினைவிடம் வளாகத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பாரதமாதா சிலையுடன் கூடிய நினைவாலயம், சுகாதார வளாகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்நிலையில் மந்திரி மு.பெ.சாமிநாதன் விழாவில் கலந்துகொண்டு பாரதமாதா நினைவாலயம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து விடுதலை போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவிடம் மற்றும் பாரத மாதா சிலைக்கு மந்திரி மு.பெ. சாமிநாதன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மந்திரி மு.பெ. சாமிநாதன் கூறுவதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவை நிறைவேற்றும் வகையில் பாரத மாதா ஆலயம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாரத மாதா ஆலயம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிறப்பை போற்றும் வகையில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என மந்திரி மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 2011 – ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் மண்டபம் அமைத்தார். இந்த வளாகத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி மு.பெ. சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சேது முருகன், தாசில்தார் பாலமுருகன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.