பாரத்நெட் டெண்டர் ரத்து இல்லை; புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். டெண்டருக்கான புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பாரத்நெட் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான நிதி ஒதுக்குகிறது. புதிய விதிகளின் படி டெண்டர் விடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ. 2,000 கோடி மதிப்பில்பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்டம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பாரத்நெட் ரூ.1950 கோடியில் 12,524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர கொண்டு வரப்பட்டது. இதற்கான டெண்டரில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாக திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளனர். இதனால் தமிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்வதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.