அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை இன்று ஜெனீவாவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச உள்ளார். முதலில் பிரித்தானியாவுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு பிரதமரான போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து பிரித்தானியாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்டு மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்கும் செயல்பாடு, உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, அண்டை நாடுகளுடனான மோதல், கொரோனா வைரஸ் பரப்பியது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரசல்ஸ்சில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பில் இருவரும் இருநாட்டு நல்லுறவு, ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை கொலை செய்ய நடந்த முயற்சி, அமெரிக்க அரசு அலுவலகங்கள் மீதான ரஷ்யாவின் சைபர் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து பேசுகின்றனர். மேலும் சீனாவின் அத்துமீறல்கள், உலக அளவில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் ஆகியவை குறித்தும் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.