இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, பார்த்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற 3 நெட்வொர்க் நிறுவனங்கள் தான் அதிகமான அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்த நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு சேவைகள் தொடர்பாக குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகள் வரும். மேலும் ரீசார்ஜ் முடிந்துவிட்டது போன்ற செய்திகள் அனுப்பப்படுகின்றது.
ஆனால் மோசடிக் கும்பல்கள் போலியான குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பி வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி விழிப்புணர்வு மக்களிடையே போதிய அளவில் இல்லாத காரணத்தினால் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. மேலும் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பர், வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு விவரங்களை பகிர்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
வாடிக்கையாளர்களை தெரிந்துகொள்ளும் கேஒய்சி நடைமுறை பயன்படுத்தியே இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடைபெற்ற வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக ஒரு லிங்க் ஐ அனுப்பி அதனை கிளிக் செய்யுமாறும் தனிநபர் விவரங்களை கேட்குமாறும் மோசடி கும்பல் கேட்டு ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டிருக்கின்றது.
மேலும் இது தொடர்பாக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அனைவருக்கும் மெசேஜ் அனுப்பபட்டிருக்கின்றது. அதில் கேஒய்சி என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் யாரும் ஓடிபி போன்ற விவரங்களை யாரிடமும் பகிர கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.