அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அப்படி உருவாகவுள்ள புதிய புயலுக்கு ஜாவித் என பெயரிடப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து நாளை புயலாகவும், மேலும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இதையடுத்து வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ஜாவித் என பெயரிடப்பட்டுள்ளது.புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது