உலக நாடுகளில் குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவதால் தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா, லண்டன் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இந்த நாடுகளில் இருந்து சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி,தோல் அலர்ஜி மற்றும் அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் அவ்வாறு அறிகுறிகள் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட பயணி 21 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.