வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக ஒரே மாதத்தில் 100 சென்டி மீட்டர் அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது. மேலும் தெற்கு வங்ககடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.