தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் , தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுகைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் லேசான அறிகுறிகள் ஏதாவது இருந்தால் பாராசிட்டமால், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி ஆகிய மாத்திரைகள் வழங்கி அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். வீட்டு தலைமையில் உள்ளவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சிலேட்டர் மூலமாக பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களை தினசரி தொலைபேசி மூலம் கண்காணித்து வரவேண்டும்.
மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கிளி வாரத்தில் திங்கட்கிழமை தோறும் கொரோனா நிலவரம் தொடர்பாக உள்ளூர் அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். மேலும் பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், துணிக் கடைகள் போன்ற இடங்களில் முககவசம் கட்டாயம் அணிவது மட்டுமல்லாமல் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.