தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஆடி அமாவாசையான இன்றும், ஆகஸ்ட் 11ம் தேதியும் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.