வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ஆம் தேதி வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.