வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது மக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணை, மெழுகுவர்த்தி, ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்கள், மாத்திரைகள், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்கள்,டயப்பர் கள் மற்றும் நாப்கின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.