தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு அருகே தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரை நோக்கி நெருங்கி வரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா,வட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.