தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் அதிக மழையின் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது .அதுமட்டுமின்றி அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுவதால், கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
இந்த சூழலில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அதிக மழையின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வாழை போன்ற பயிர்கள் மழைநீரால் சேதமடையலாம். எனவே பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத நெல் விவசாயிகள் உடனடியாக பதிவு செய்யுமாறு வேளாண்மை உற்பத்தி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பயிர்கள் சேதம் அடைய கூடும் என்பதால் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக உடனே பதிவு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.