டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தர விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரபிக் கடலில் உருவாகும் டவ்-தே புயல் வரும் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் லட்சத்தீவு – மத்திய கிழக்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கு செல்வதாக நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.