தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது.
தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 1, 417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் இதுவரை 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்னும் பல்வேறு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டி இருப்பதால் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உடனே கல்லூரிகளை மூட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.