2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பல்வேறு இடங்களில் தள்ளுபடி செய்யவில்லை என்று பேரவையில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி “இதுவரை தகுதியுடையோர் என்று 14,60,000 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். இன்னும் 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் திரும்ப வழங்கப்படும்” என்று கூறினார்.