தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்த அவர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படி இன்று மதுரை, திருவாரூர், திருச்சி மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெல்லி நிஜாமுதீன் மாநாடுக்கு சென்று திரும்பியவர்கள் உட்பட கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள பலருக்கு சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.