கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் குணமடைந்துள்ளனர். 879 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்திருந்த நிலையில் மஹாராஷ்டிராவில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் 40 வயதான கொரோனா வைரஸ் நோயாளிக்கு கடுமையான சுவாச சிக்கல் இருந்ததை தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்த நோயாளியாகவும் இருந்த அவரின் உயிரிழப்பால் மகாராஷ்டிராவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக மஹாராஷ்டிராவில் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.